எங்கே போகிறோம்!


இன்று மாலை வீட்டிற்கு வந்ததும் மேஜை மீது இருந்த அந்த திருமணம் அழைப்பிதழ் என் கவனத்தைக் கவர்ந்தது. எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரின் மகன் திருமணம். “அப்பாடா! ஒருவழியாய் திருமணம் நிச்சயமாயிற்றா!” என்று மகிழ்ச்சியுடன் அழைப்பிதழைப் பிரித்துப் பார்க்கலானேன். பையனுக்கு வயது 39, மூலம் நட்சத்திரம் ஜாதக கட்டத்தில் 2இல் ராகு 8இல் கேது. இருபத்தி எட்டாவது வயதில் இருந்து பெண் பார்ப்பதும், தட்டிப் போவதுமாக இருந்தது. போகாத கோயில் இல்லை, வணங்காத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரமும் இல்லை, எப்படியோ! நல்லபடியாக முடிந்தது என்ற மகிழ்ச்சி. நம் சமூகத்தின் இன்றைய நிலைக்கு மேலே கண்ட திருமணம் ஒர் உதாரணம் தான். நண்பரின் மகனைப் போல் பல வரன்கள் வயது நாற்பதை தொட்டுக் கொண்டு இருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. சமீபத்தில் நமது சமூக அமைப்பு ஒன்று முப்பது வயதிற்கு மேற்பட்ட வரன் களுக்கான “மங்கல சந்திப்பு ஒன்று நடத்தியது. அதற்கு அடுத்த மாதம் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு என்று ஒரு மங்கல சந்திப்பு நடந்தது. இரண்டில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உரிய சந்திப்பில்தான் கூட்டம் அதிகம். இது நமக்கு ஒரு எச்சரிக்கை தகவல். அப்போதெல்லாம் கொள்வினை கொடுப்பினை என்பது குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் தான் இருந்தது. சற்று விரிவடைந்து பிற பகுதிகளிலும் வரன் பார்க்க ஆரம்பித்தோம். குடும்பங்களின் பொருளாதார நிலை சுமாராக இருந்தபோது பிள்ளைகளின் எண்ணிக்கையோ அதிகம். “நாம் இருவர், நமக்கு இருவர்” என்ற கொள்கை வந்தபோது சமூகத்தின் ஜனத்தொகையும் சுருங்க ஆரம்பித்தது. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற கொள்கைகளால் திருமணங்கள் தள்ளிப்போனது. “பெண்ணின் திருமண வயது 21” என்று அரசு கொள்கை வேறு. படித்து முடித்தும் வேலை தேட வேண்டிய சூழ்நிலை. எவ்வளவு சொத்துக்கள் திறமையான சுயதொழில் இருந்தாலும் நம்பிக்கை இல்லாமல் கண் நோக்கும் சமூகம். (ஒரு சில சமூகத்தில் சுய தொழில் செய்தால் தான் மரியாதை! படிப்பு இரண்டாம் பட்சம்தான்). இங்கு வேலை செய்து மாத சம்பளம் வாங்குபவருக்குத்தான் மரியாதை. பெண் வரன் போடும் கண்டிஷன்;இத்தியாதி இத்தியாதிகாரணங்களுடன்இருக்கவே இருக்கிறது அவரவர்களுக்கென்று உள்ள குடும்ப சூழல், சொந்தப் பிரச்சினைகள், இவை அனைத்தையும் தாண்டி ஒரு திருமணத்தை முடித்து வைப்பதற்குள் பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது. இதற்கெல்லாம் காரணம் ஆண்-பெண் சமநிலை (Ratio) குறைந்து வருவது ஒரு காரணம். ஆதலால் சில பெற்றோர்கள் வேறு முதலியார் அமைப்புகளில் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும் தயங்குவதில்லை. ஆனால் அங்கேயும் இதே சூழல்தான். எல்லா அமைப்புகளும் பெண் எடுக்க விரும்புகிறார்களே தவிர பெண் கொடுக்க முன்வருவதில்லை. இன்றைய வரன்களுக்கு காலத்தில் திருமணம் நடைபெற முடியாத நிலை என்றால், எதிர்கால சந்ததியினரின் நிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லைஇந்தப் பிரச்சினைகளுக்கு விடைதான் என்ன? நமது சமூக அமைப்புகள் ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டும்உடனடியாக ஒரு தீர்வினை காண வேண்டிய சூழ்நிலையில் உள்ளது நம் சமூகம். இல்லையேல் வருங்காலத்தில் முதலியார் என்ற அமைப்பு ஏட்டுச் சுவடிகளில் இருந்து தான் அடையாளம் காட்ட வேண்டுமோ? என்கிற நிலைக்கு ஆளாகாமல் சமூகத்தை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவர் கையிலும் உள்ளது.


- சிவ. தணிகைமணி